கால்வாய், சாலை வசதி இல்லை: மழைநீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கும் கிருபா நகர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேலூர் அருகே அரியூர், கிருபாநகர் மழைநீர் சூழப்பட்ட தீவு போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
இந்த நிலையில் அரியூர் ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கிருபாநகர் பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் நீரால் சூழப்பட்ட தீவு போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியது. 5 தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழை நின்ற போதும் தண்ணீர் வடியவில்லை. ஏனென்றால் கால்வாய் வசதி இல்லை. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் தொற்றுநோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகளும் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. அவைகள் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகிறது. குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப பயமாக உள்ளது. சாலை வசதியும் இல்லாததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் அவசர தேவைக்காக வேறு இடங்களுக்கு செல்ல முடிவதில்லை.
கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை நீருடன் சேர்ந்து தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சில வீடுகளில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வீட்டின் அருகிலேயே சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து உள்ளோம். அந்த தொட்டிகளிலும் கழிவுநீர் வெளியேறி தேங்குகிறது. இதுகுறித்து பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதியில் கால்வாய் வசதி, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மழை நீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story