மாவட்டத்தில் இன்று போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு 25,863 பேர் எழுதுகிறார்கள்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்துத் தேர்வை 25863 பேர் எழுதுகிறார்கள். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
தர்மபுரி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2-ம் நிலை போலீசார், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஆகிய பணிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை 21,853 ஆண்களும், 4,009 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவருமென என மொத்தம் 25,863 பேர் எழுதுகிறார்கள்.
இந்த தேர்வுக்காக தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத்தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர் போன்ற அதிநவீன மின்சாதனங்கள் உள்ளிட்ட இதர கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவற்றை தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு தொடங்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும். பேனா மற்றும் தேர்வு நுழைவு சீட்டு ஆகியவற்றை மட்டும் தேர்வு அறைக்குள் எடுத்து வர வேண்டும். இந்த எழுத்துத்தேர்வில் முறைகேடு மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த விதிகளின் அடிப்படையில் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story