தண்டராம்பட்டு அம்மா குளம், வரலாற்று நினைவு சின்னமாக அறிவிப்பு; பொதுமக்கள் வரவேற்பு


தண்ணீர் நிரம்பிய அம்மா குளம்.
x
தண்ணீர் நிரம்பிய அம்மா குளம்.
தினத்தந்தி 14 Dec 2020 1:15 AM IST (Updated: 14 Dec 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அம்மா குளத்தை வரலாற்று சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

அம்மா குளம்
தண்டராம்பட்டு தாலுகா சின்னியம்பேட்டை கிராமத்தில் ஆயக்கலைகள் அறுபத்தி மூன்றையும் விளக்கும் சிற்பங்கள் பொறித்த குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதேபோன்ற குளம் ஒன்று தண்டராம்பட்டு அருகிலுள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் ‘அம்மா குளம்’ என்று அழைக்கின்றனர்.

இந்த குளம் பராமரிக்கப்படாததால் சிற்பங்கள் சிதலமடைந்து அழியும் நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைத்து வரலாற்று சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் கந்தசாமி இந்த கோரிக்கையை ஏற்று குளத்தை சீரமைப்பதற்கு தொல்பொருள் துறைக்கு கோப்புகளை அனுப்பினார். அதன் பின்னர் மத்திய தொல்லியல் துறை இயக்குனர் (ஓய்வு) வெங்கடேசன் மற்றும் பொறியாளர்கள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நினைவு சின்னமாக
அதைத் தொடர்ந்து குளத்தை சீரமைக்க ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு குளம் சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. கடந்த ஜூன் மாதம் மீண்டும் தொடங்கிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பெய்த மழையின் காரணமாக குளத்தில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் தற்காலிகமாக புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் அபூர்வ கலை சிற்பங்கள் கொண்ட அம்மா குளத்தை தமிழக அரசு வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

Next Story