மழையால் பாதிக்கப்படும் ரெயின்போ நகருக்கு நிரந்த தீர்வு; புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி


ரெயின்போ நகர் பொதுமக்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டபோது எடுத்த படம்
x
ரெயின்போ நகர் பொதுமக்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டபோது எடுத்த படம்
தினத்தந்தி 14 Dec 2020 3:42 AM IST (Updated: 14 Dec 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு மழைக்கும் பாதிக்கப்படும் ரெயின்போ நகருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.

கோரிக்கை மனு
வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயலால் புதுவையில் பலத்த மழை பெய்தது. இதனால் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடானது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் ரெயின்போ நகர் நல்வாழ்வு சங்கத்தினர் மற்றும் ரெயின்போ நகர் மகளிர் நல்வாழ்வு சங்கத்தினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ‘புதுவையில் மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. தற்போது பெய்த மழையிலும் இதேநிலை தான் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

நிரந்தர தீர்வு
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம், ‘ஒவ்வொரு மழையிலும் ரெயின்போ நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தி மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

அப்போது தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story