பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வை 9,557 பேர் எழுதினர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வினை 9,557 பேர் எழுதினர். 1,069 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பெரம்பலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் உள்ள 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான 10 ஆயிரத்து 906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 3,135 ஆண்களும், 659 பெண்களும் என மொத்தம் 3,794 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 5,473 ஆண்களும், 1,359 பெண்களும் என மொத்தம் 6,832 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தேர்வு மையங்களில் நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு கலை கல்லூரி, உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளி மற்றும் கல்லூரிகள், ஜெயங்கொண்டத்தில் உள்ள மார்டன் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த 9 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.
சோதனை
தேர்வு எழுத தேர்வாளர்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதில் ஆண், பெண்களை தனித்தனியாக வரிசைப்படுத்தி போலீசார் நிற்க வைத்தனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே காத்து நிற்பது போல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை நின்றது. தேர்வு எழுத வந்த ஆண், பெண்களை மையத்திற்கு வெளியிலேயே நிற்க வைத்து போலீசார் சோதனையிட்டும், மெட்டல் டிடெக்டர் எந்திரம் வழியாக வரச்சொல்லியும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்ட பிறகே தேர்வு மையத்திற்கு உள்ளே செல்ல அவர்களை அனுமதித்தனர்.
மேலும் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும், முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசமும் வழங்கினர். மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப்பட்டது. தேர்வாளர்கள் பேனா, தேர்வு நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை, தேர்வு அட்டை ஆகியவற்றை மட்டும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மின்சாதனங்களுக்கு தடை
மேலும் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள செல்போன், புளூடூத், கால்குலேட்டர் போன்ற அதிநவீன மின் சாதனங்களையும், கைக்கடிகாரம், தொலைநகலி போன்ற சாதனங்களையும், பென்சில் ஆகியவற்றையும் தேர்வாளர்கள் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். அதனை கொண்டு வந்தவர்களிடம் இருந்து, அந்த பொருட்களை போலீசார் வாங்கி வைத்து, தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
தேர்வு எழுத வந்த திருமணமான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு, தேர்வு எழுத சென்றதை காணமுடிந்தது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வந்த தேர்வாளர்களை போலீசார் இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்று தேர்வு மையத்தில் கொண்டு விட்டனர்.
9,557 பேர் எழுதினர்
சரியாக காலை 11 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு 12.10 மணிக்கு முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 3,794 பேரில், 333 ஆண்களும், 75 பெண்களும் என மொத்தம் 408 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,386 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பெரம்பலூரில் நடந்த எழுத்து தேர்வினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 6,832 பேரில், மொத்தம் 661 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 6,171 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அரியலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடந்த மையங்களை ஆயுதப்படை ஐ.ஜி.யும், அரியலூர் மாவட்ட சிறப்பு மேற்பார்வை அதிகாரியுமான தமிழ்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மைய பணி மற்றும் பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 9 துணை சூப்பிரண்டுகள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட காவல் ஆளினர்கள் பணியில் ஈடுபட்டார்கள்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மொத்தம் 10,626 பேரில், 9,557 பேர் தேர்வு எழுதினர். 1,069 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story