சில்வர் பீச்சுக்கு செல்ல இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி விளையாட்டு உபகரணங்களை சுற்றியுள்ள மழைநீர் அகற்றப்படுமா?
கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விளையாட்டு உபகரணங்களை சுற்றிலும் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடலூர்,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன்படி கடலூர் சில்வர் பீச்சும் மூடப்பட்டது. நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால் பொதுமக்கள் வேறுவழியின்றி வீட்டுக்குள் முடங்கினர். இருப்பினும் ஒரு சிலர் சில்வர் பீச்சுக்கு செல்கின்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் திருப்பி அனுப்பி வந்தனர். இதற்கிடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14.12.2020 திங்கட்கிழமை (இன்று) முதல் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.
அனுமதி
அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு பிறகு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தெரிவித்தார். இதேபோல் கடலூர் சில்வர் பீச்சில் உள்ள விளையாட்டு பூங்காவும் இன்று முதல் திறக்கப்படுகிறது. ஆனால் கடற்கரையோரத்தில் கடைகள் இருக்கும் இடத்தில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து வீணாகி கிடக்கிறது. இதை சரி செய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் கன மழையால் சில்வர் பீச்சில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளித்து வருகிறது. அந்த நீரையும் வடிய வைக்க நகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை.
மழைநீரை அகற்றவேண்டும்
இதற்கிடையில் இன்று சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுவர்கள் சில்வர் பீச்சுக்கு அதிகம் பேர் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் விளையாட்டு உபகரணங்களில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடைந்த உபகரணங்களை மாற்றுவதோடு, தேங்கி நிற்கும் மழைநீரையும் அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story