திண்டுக்கல் அருகே, மாதிரி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி


திண்டுக்கல் அருகே, மாதிரி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 Dec 2020 4:00 AM IST (Updated: 14 Dec 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் மாதிரி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பில்லமநாயக்கன்பட்டி, கொசவபட்டி, புகையிலைப்பட்டி, தவசிமடை, வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, அந்த பகுதியில் மாதிரி வாடிவாசல் அமைக்கப்பட்டது.

வாடிவாசல் வழியாக காளைகளை சீறிப்பாய வைத்து உரிமையாளர்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி அளித்தனர். சீறி வரும் காளைகளால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவை அனைத்தும் கயிற்றுடன் இணைக்கப்பட்டிருந்தன. இதனால் காளைகள் பயிற்சி நடக்கும் இடத்தைவிட்டு வெளியே ஓடிச்செல்ல முயன்றால் அதன் உரிமையாளர்களோ அல்லது மாடிபிடி வீரர்களோ அந்த கயிற்றை பிடித்து இழுத்து காளைகளை கட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

இந்த நிலையில் நேற்று நடந்த பயிற்சியின் போது மாதிரி வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்க முயன்றார். அப்போது அந்த வீரரை தனது கொம்பால் தூக்கி எறிந்து அந்தரத்தில் பறக்க விட்டு கம்பீரமாக களத்தில் நின்றது அந்த காளை. பின்னர் அந்த காளையை அதன் உரிமையாளர் தன்னுடன் அழைத்துச்சென்றார். இதுகுறித்து ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் பொங்கல் பண்டிகையையொட்டி எந்தவித தடையும் இன்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் பில்லமநாயக்கன்பட்டியில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது எடுக்கும் வேகம் தான், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் காளைகள் வெற்றி பெற உதவும். இதற்கு காளைகளுக்கு மூச்சு பயிற்சி அவசியம். எனவே 2 நாட்களுக்கு ஒருமுறை காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சியும், மண்ணை கொம்பால் குத்தும் பயிற்சியும் அளிக்கப்படும். மேலும் வாடிவாசலை பார்த்து காளைகள் மிரண்டுவிடக்கூடாது என்பதற்காகவே அது போன்ற அமைப்பை இங்கு ஏற்படுத்தி பயிற்சி கொடுக்கிறோம்.

ஜல்லிக்கட்டு நேரத்தில் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. தவிடு, உளுந்து, சிவப்பு துவரை, பட்டாணி உள்ளிட்ட உணவு வகைகள் ஊற வைத்து காளைகளுக்கு வழங்கப்படும். தினமும் இரவு நேரத்தில் பருத்தி விதையை ஊற வைத்து அதில் வெல்லம் கலந்து கொடுக்கப்படும்.

உடல் திடகாத்திரமாக இருக்கவும், கால்கள் நன்றாக வலுப்பெறவும் இந்த உணவு வகை அளிக்கப்படுகிறது. தற்போது பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள 20 காளைகளுக்கு தினமும் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story