நொய்யல் சீரமைப்பின் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலம் புத்துயிர்பெறும்: விவசாயிகளின் காவல் அரணாக தமிழக அரசு திகழ்கிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
நொய்யல் சீரமைப்பின் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலம் புத்துயிர்பெறும் என்றும், விவசாயிகளின் காவல் அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவையை அடுத்த போளுவாம்பட்டியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நொய்யல் ஆற்றில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பணிகள், நடைபெற்றுவரும் பணிகள் தொடர்பான விவசாயிகளுடனான கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசியதாவது:-
அதிக வேளாண் விளைச்சலும், வறுமை ஒழிப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்ந்து வேளாண் நலன்காக்கும் அரசாகவும், விவசாயிகளின் காவல் அரணாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு திகழ்கிறது. தமிழக அரசு விவசாயத்துறையில் சிறந்த செயல்பாட்டிற்கு உலக வேளாண் விருதான ‘ஸ்காச் விருது‘ பெற்றுள்ளது.
விவசாயத்தில் சாகுபடி பரப்பினை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்டுவருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகள் நலன் காக்கும் பல திட்டங்களை தானே முன் வந்து செயல்படுத்தி வருகிறார். அவர், நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் நொய்யல் ஆற்றின் 72 கி.மீ நீளபகுதிகளை சீரமைக்க ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடியாக பயன்பெறும் விவசாயிகளின் கருத்துகளை கேட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் புத்துயிர் பெறும்.
நொய்யல் ஆற்றின் கிளை நதிகளாக உள்ள இருட்டுப்பள்ளம், உரிப்பள்ளம், கள்ளிப்பள்ளம், தென்னமநல்லூர் பள்ளம் மற்றும் தென்கரைப்பள்ளம் ஆகிய இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் தடுப்பணைகளும், நீலி, சித்திரைச்சாவடி, கோவை அணைக்கட்டு, குறிச்சி அணைக்கட்டு ஆகிய தடுப்பணைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. நொய்யல் ஆற்றில் உள்ள 23 அணைக்கட்டுகளில் பழுதடைந்த 18 அணைக்கட்டுகள் சீரமைக்கப்படுகிறது. மீதமுள்ள 5 அணைக்கட்டுகள் குடிமராமத்து, நபார்டு மற்றும் தன்னிறைவு போன்ற திட்டங்களில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story