போலீஸ் பணிக்கான தேர்வை 2,065 பேர் எழுதினர் - கோவை சரக டி.ஐ.ஜி. ஆய்வு
நீலகிரியில் போலீஸ் பணிக்கான தேர்வை 2,065 பேர் எழுதினர். அதை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தமிழகத்தில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்கள் தேர்வு எழுத வசதியாக ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வழக்கமாக காலை 10 மணிக்கு தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் இருந்து தேர்வர்கள் வர வேண்டியது இருந்ததால் காலை 11 மணிக்கு தேர்வு தொடங்கி 12.20 மணி வரை நடந்தது.
தேர்வு மையங்களுக்கு வந்த தேர்வர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளே எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை.
மொத்தம் 1,847 ஆண்கள், 218 பெண்கள் என 2 ஆயிரத்து 065 பேர் தேர்வு எழுதினர். 405 ஆண்கள், 62 பெண்கள் என 467 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்வை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டு நடமாட்டம் இல்லை. காவல்துறை மூலம் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்து உள்ள கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் முகாம்கள் அமைத்து வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story