போலீஸ் நிலையம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு - போத்தனூரில் பரபரப்பு


போலீஸ் நிலையம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு - போத்தனூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2020 3:30 AM IST (Updated: 14 Dec 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

போத்தனூரில் போலீஸ் நிலையம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர்,

கோவை சுந்தராபுரத்தை அடுத்த பிள்ளையார்புரம் காந்திநகரை சேர்ந்தவர் சவுகத் அலி(வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சவுகத் அலி நேற்று மாலை வெள்ளலூரில் மற்றொரு ஆட்டோ டிரைவரான சதீஸ் என்பவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது சவுகத் அலி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சவுகத் அலியை பிடித்து, போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் சவுகத் அலியின் ஆட்டோவை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சவுகத் அலிக்கு போலீசார் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளை(இன்று) போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆட்டோவை எடுத்து செல்லும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சவுகத் அலி, அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன் நின்று, திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். மேலும் உடலில் பற்றி எரிந்த தீயுடன் போலீஸ் நிலையத்துக்குள் ஓடினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சவுகத் அலி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

போலீஸ் நிலையம் முன் ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story