போலீஸ் எழுத்து தேர்வு: மாவட்டத்தில் 6,689 பேர் எழுதினர்


போலீஸ் எழுத்து தேர்வு: மாவட்டத்தில் 6,689 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 14 Dec 2020 3:32 AM GMT (Updated: 14 Dec 2020 3:32 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வை 6,689 பேர் எழுதினர்.

எலச்சிபாளையம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்களை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதுக்கும் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆர். கல்லூரியில் உள்ள மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மாவட்டத்தில் 8 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி நேற்று காலை 8 மணி முதல் தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்த போலீசார் தேர்வர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ததோடு, கைகளை கழுவ கிருமிநாசினி தெளித்தனர். மேலும் முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காலை 11 மணிக்கு தேர்வு தொடங்கியது. 11.30 மணி வரை வந்தவர்களும் தேர்வு மையத்துக்குள் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

6,689 பேர் எழுதினர்

இதற்கிடையே விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 451 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து 3 ஆயிரத்து 687 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் 142 பெண்கள் உள்பட 471 பேர் தேர்வு எழுத வரவில்லை. 3,002 பேர் தேர்வை எழுதினர். மொத்தம் 6,689 பேர் போலீஸ் எழுத்து தேர்வை எழுதினர். இதையடுத்து மதியம் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தது.

Next Story