பாதாள சாக்கடை குழாயில் அரிப்பு: குட்ஷெட் சாலையில் 3 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் - வாகன ஓட்டிகள் அச்சம்


பாதாள சாக்கடை குழாயில் அரிப்பு: குட்ஷெட் சாலையில் 3 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் - வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 14 Dec 2020 3:45 AM IST (Updated: 14 Dec 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை குழாயில் அரிப்பு ஏற்பட்டதால் கோவை குட்ஷெட்சாலையில் திடீரென்று 3 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

கோவை,

கோவை ரெயில் நிலையத்தின் பின்புறம் உள்ள குட்ஷெட் சாலை வழியாக பெரிய கடை வீதி, அரசு மருத்துவமனை, லங்கா கார்னர், அவினாசி ரோடு மேம்பாலம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் குட்ஷெட் சாலையில் இருந்து அவினாசி ரோடு மேம்பாலம் செல்லும் சர்வீஸ் சாலையில் திடீரென 3 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள சாலைகளின் வழியாக பாதாள சாக்கடை செல்கிறது. மழை காரணமாக அரிப்பு மற்றும் அழுத்தம் ஏற்பட்டு இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குட்ஷெட் சாலையில் இது போன்று திடீர் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவினாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து புரூக் பாண்ட் செல்லும் சாலையிலும் இதே போல் பள்ளம் உருவானது. நீண்ட நாட்களுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாயில் அளவுக்கு அதிகமாக மழை தண்ணீர் வந்ததால் இது போன்ற பள்ளம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Next Story