போலீஸ் எழுத்து தேர்வு: மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் எழுதினர்
போலீஸ் எழுத்து தேர்வை சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் எழுதினர்.
சேலம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்களை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதன்படி சேலத்தில் நேற்று போலீஸ் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 99 ஆண்கள், 3 ஆயிரத்து 179 பெண்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அதன்படி தேர்வர்கள் நேற்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தேர்வு மையத்தின் போலீசார் நின்று கொண்டு தேர்வு எழுத வந்தவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து முககவசம் அணிந்து இருந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
போலீஸ் கமிஷனர்
பின்னர் தேர்வர்கள் வெளியில் வந்து கடைகளில் முககவசம் வாங்கி அதை அணிந்து கொண்டு தேர்வு அறைக்கு சென்றனர். தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த வித கருவிகளையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 710 பேர் தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர்கள் சந்திரசேகரன், செந்தில் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
Related Tags :
Next Story