கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் வாங்க முயற்சி - அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது
அடகு கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் வாங்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் ஜி.என்.டி. சாலை அருகே அடகு கடை நடத்தி வருபவர் சஞ்சய் (வயது 26). நேற்று இவரது கடைக்கு வந்த 4 பேர், தாங்கள் வைத்து இருந்த நகைகளை அடகு வைத்து கொண்டு அவசரமாக ரூ.2 லட்சம் வேண் டும் என கேட்டனர். அவர்களிடம் நகையை வாங்கிய சஞ்சய், கடைக்குள் சென்று சோதனை செய்தார்.
அதில் அவை கவரிங் நகைகள் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். கவரிங் நகைகளை அடகு வைத்து தன்னிடம் மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர் புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை பாடியைச் சேர்ந்த ஹக்கீம் (42), அவருடைய மனைவி அஸ்வின்(40), ராஜமங்கலம் 8-வது தெருவைச் சேர்ந்த சையத் அபூபக்கர் (32), செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் பெரிய தெருவை சேர்ந்த அசோக்குமார்(42) என்பது தெரியவந்தது.
இந்த கும்பல் செங்குன்றத்தில் ஏற்கனவே 2 கடைகளில் இதுபோல் கவரிங் நகைகளை கொடுத்து கைவரிசை காட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களில் அஸ்வினை மட்டும் ஜாமீனில் விடுவித்த நீதிபதி, மற்ற 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான அசோக்குமார், அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story