தமிழகத்தில் 499 மையங்களில் போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு - 11 ஆயிரம் பணியிடங்களுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு 499 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு நடந்த எழுத்து தேர்வை சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
சென்னை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11 ஆயிரத்து 741 பணியிடங்கள் மற்றும் 72 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இதற்காக ஆன்-லைன் வழியாக விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் இருந்து, 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நேற்று நடந்தது. காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு கண்காணிப்பு பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரி, லயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 35 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வை 29 ஆயிரத்து 981 பேர் எழுதினார்கள்.
தேர்வு எழுத வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்த ஒரு சிலருக்கு போலீசாரே முக கவசம் வழங்கினர். தேர்வு எழுத வந்தவர்களின் மணிபர்ஸ், செல்போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் தேர்வு முடிந்து டோக்கன்களை திரும்ப வழங்கி தங்களது உடைமைகளை பெற்று சென்றனர்.
சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி மையங்களுக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தேர்வு அறைகளுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு பணி குறித்த சில அறிவுரைகளை போலீஸ் அதிகாரிகளுக்கு, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.
அந்த வகையில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இத்தேர்வை எழுதியதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story