மழையில் நனைந்த நெல்லை அறுவடை செய்யும் பணி: கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்


மழையில் நனைந்த நெல்லை அறுவடை செய்யும் பணி: கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Dec 2020 4:45 AM GMT (Updated: 14 Dec 2020 4:45 AM GMT)

மழையில் நனைந்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெறுவதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதைத்தொடர்ந்து புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

அறுவடை பணி

தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தற்போது மழை பெய்யாததால் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது. இளம்பயிர்கள் எல்லாம் பச்சை, பசேல் என காட்சி அளித்தது. அறுவடைக்கு தயார் நிலையில் நின்ற முன்பட்ட சம்பா நெற்பயிர்கள் பல இடங்களில் முளைக்க தொடங்கி விட்டன. இதை பார்த்த விவசாயிகள் சிலர், நெற்பயிரை அறுவடை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி தஞ்சையை அடுத்த காசவளநாடு புதூர், காட்டூர், வாண்டையார் இருப்பு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதியில் மழையில் நனைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.

கூடுதல் கொள்முதல் நிலையங்கள்

பலர், ஈரப்பதத்தை குறைக்க சாலையில் நெல்லை கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கிவிட்டாலும் தற்போது அதிகஅளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் அறுவடை செய்த நெல்லை பல கிலோமீட்டர் தூரத்திற்கு டிராக்டரில் கொண்டு வர வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் கருத்து

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களிலும் முதலில் 300 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் 700 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க தினமும் 5 தொழிலாளர்களுக்கு தலா ரூ.350 வீதம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 17 சதவீத ஈரப்பதம் வரை தான் கொள்முதல் செய்கிறார்கள். ஏற்கனவே மழையில் நனைந்து மகசூல் குறைந்துவிட்டது. இவற்றில் நெல் ஈரப்பதமாக இருக்கிறது. கருப்பு கலராக இருக்கிறது என கூறி கொள்முதல் செய்யாமல் தவிர்க்கக்கூடாது. எல்லா நெல்லையும் விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

7 இடங்களில்...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்(பொறுப்பு) சிற்றரசு கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 68 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் 18 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் கூடுதலாக 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளோம். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார்.

Next Story