திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்பட வடசென்னைக்கு புத்தாண்டில் மெட்ரோ ரெயில் சேவை - பாதுகாப்பு ஆணையர் ஜனவரியில் ஆய்வு


திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்பட வடசென்னைக்கு புத்தாண்டில் மெட்ரோ ரெயில் சேவை - பாதுகாப்பு ஆணையர் ஜனவரியில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2020 10:33 AM IST (Updated: 14 Dec 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்பட விரிவாக்கம் செய்யப்பட்ட வடசென்னைக்கு ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பணிகள் குறித்து பாதுகாப்பு ஆணையர் ஜனவரி முதல் வாரத்தில் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை -விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை நீட்டிப்பு பணி ரூ.3 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் தியாகராயர் கல்லூரி, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, டோல்கேட், காலடிபேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர் விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் தற்போது உயர்த்தப்பட்ட பாதையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. மின்சார இணைப்புகள் மற்றும் சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடைந்த உடன் இம்மாத இறுதியில் டீசல் என்ஜினும், அதனை தொடர்ந்து மெட்ரோ ரெயிலும் இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து புத்தாண்டு பிறந்த ஜனவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து பயணிகள் ரெயிலை இயக்குவதற்குரிய சான்றிதழை வழங்கிய உடன், மத்திய, மாநில அரசுகள் அனுமதியின் பேரில் ஜனவரி கடைசி வாரத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த பாதையில் 2 ரெயில் நிலையங்கள் சுரங்கத்திலும், 6 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து தொடங்கப்பட்டால் திருவொற்றியூரில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும். தினசரி பயணிகளிடையே 30 சதவீதம் ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய பேக்கேஜ் ஸ்கேனர் போன்ற நவீன கருவிகள் வாங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட உள்ளது. அத்துடன் விம்கோ நகரில் 48 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் பணிமனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும். அதன் அருகில் 20 மாடி கட்டிடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் நடைப்பாதையும் கட்டப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story