நாகை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 7,675 பேர் எழுதினர்


நாகை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 7,675 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 14 Dec 2020 10:46 AM IST (Updated: 14 Dec 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 7,675 பேர் எழுதினர்.

நாகப்பட்டினம், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10 ஆயிரத்து 906 பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதன்படி நாகை மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத ஆண்கள், பெண்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 608 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 7,675 பேர் தேர்வு எழுதினர். 933 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்திருந்த தேர்வர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்றவை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது.

முககவசம்

அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. தேர்வர்கள் புகைப்படத்துடன் கூடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை கொண்டு வரவில்லை என்றாலும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே தேர்வு அறையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யப்பட்டனர். தேர்வு நடந்த அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு மையங்களை சிறப்பு அதிகாரி ஐ.ஜி. கணேசமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ்மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.. பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 200 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Next Story