நாகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு


நாகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Dec 2020 10:49 AM IST (Updated: 14 Dec 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமை கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 6 லட்சத்து 42 ஆயிரத்து 617 ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 62 ஆயிரத்து 89 பெண் வாக்காளர்கள், 41 மற்ற வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளர்கள் உள்ளனர்.

இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவை செய்ய கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் 1,511 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் 38 ஆயிரத்து 678 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் சிறப்பு முகாமில் 8 ஆயிரத்து 816 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்தில் நிறைவு பெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல்

விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் கொடுக்காதவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் கொடுக்கலாம். இந்த வாய்ப்பையும் தவற விட்டவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியான www.nvsp.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் தீபனா, வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், தாசில்தார் ரமாதேவி, பிரான்சிஸ் (தேர்தல்), நகராட்சி ஆணையர் ஏகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் தாலுகா பெரியகுத்தகை, பு‌‌ஷ்பவனம், கோடியக்கரை, ஆயக்காரன்புலம், தலைஞாயிறு உள்ளிட்ட பல இடங்களில் வாக்குச்சாவடி முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தல் முகாம் நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 212 பள்ளிகளில் இந்த முகாம் நடைபெற்றது. இதனை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், மாநில சட்ட குழு உறுப்பினருமான மறைமலை மற்றும் தி.மு.க.வினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் அளித்தனர்.

Next Story