காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த கத்தாழை மீன்கள் 1½ டன் சிக்கியது - ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது
காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாழை மீன்கள் அதிகளவில் சிக்கியது. சுமார் 1½ டன் மீன்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.
காரைக்கால்,
‘நிவர்’, ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர், கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மழை எச்சரிக்கை முடிந்ததை அடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சில படகுகளில் மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை கத்தாழை மீன்கள் சுமார் 1½ டன் சிக்கியது.
இந்த வகை மீன்கள் நன்றாக மழை பெய்யும் காலத்தில் அல்லது மழை ஓய்ந்த சமயத்தில், ஆழ்கடலில் சுமார் 3 அல்லது 4 நாட்கள் தங்கியிருந்து பிடித்தால் மட்டுமே கிடைக்குமாம். ஒவ்வொரு மீன்களும் 2 அடி முதல் 3 நீளமும், 10 முதல் 25 கிலோ எடையில் இருந்தது. கிலோ ரூ.1500 முதல் 2,000-க்கு விலை போனது. இந்த மீன்கள் ஏலம் விடப்பட்டது. சுமார் 1½ டன் மீன்கள் ரூ.25 லட்சத்துக்கு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்றுமதி வாய்ந்த கத்தாழை மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கத்தாழை மீன்கள், ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தவையாகும். இந்த வகை மீன்கள் (ஆண் மீன்கள்) செவில் சுவாசத்தோடு, அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்குமாம். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மேலும் இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும், அது ஒயின், ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், அதனால், மீனவர்கள் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை நெட்டி கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story