வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் 57,272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது - பார்வையாளர் ஜோதிநிர்மலா சாமி தகவல்


வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் 57,272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது - பார்வையாளர் ஜோதிநிர்மலா சாமி தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2020 12:35 PM IST (Updated: 14 Dec 2020 12:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் இதுவரை 57 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பார்வையாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பார்வையாளருமான ஜோதி நிர்மலாசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பார்வையாளர் ஜோதிநிர்மலா சாமி பேசியதாவது:-

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதுநிலை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை யாரும் பார்ப்பது கிடையாது. தேர்தலுக்கு முந்தைய நாள்தான் வாக்காளர் அடையாள அட்டையை தேடுவார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்கு அரசியல் கட்சியினரின் ஆதரவை கேட்கிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வது யாருக்கும் ஆதரவாக நடக்காது. ஒவ்வொரு பெயர் நீக்கமும் முறையாக ஆய்வு செய்த பின்னரே செய்யப்படும். சிறப்பு முகாம் முடிவடைந்தாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அளிக்கலாம். 1.1.21 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரையும் வாக்காளராக சேர்க்க வேண்டும்.

மாவட்டத்தில் 2.53 சதவீதம் பேர் இந்த வயதில் உள்ளனர். அவர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்பதை பார்க்காமல், தகுதியான அனைவரையும் வாக்காளராக மாற்ற வேண்டும் என்று செயல்பட வேண்டும். மொத்தமாக விண்ணப்பங்களை அரசியல் கட்சியினர் பெற்று வழங்கக்கூடாது. மொத்தமாக வரும் விண்ணப்பங்களை ஏற்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் பெயர் நீக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் இதுவரை 57 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 40 ஆயிரத்து 415 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. பெறப்படும் விண்ணப்பங்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு இறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் 5 நபர்களை அழைத்து அவர்களது நண்பர்களையும் சேர்ப்பதற்கு புதிய முயற்சியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்ததை பாராட்டுகிறேன். மேலும் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்தான் இந்த கூட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் வந்து உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), கீதாஜீவன் (தூத்துக்குடி), மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜீத்சிங் கலோன் (தூத்துக்குடி), விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி ஆணையர் (கலால்) சுகுமார், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ரவி, கிருபாகரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மான்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, தேசியவாத காங்கிரஸ் வரதராஜ், பி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story