சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி; பக்தர்கள் வரிசையாக செல்ல ஏற்பாடு


சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்ல நிழல் பந்தல்
x
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்ல நிழல் பந்தல்
தினத்தந்தி 15 Dec 2020 1:45 AM IST (Updated: 15 Dec 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சனிப்பெயர்ச்சி விழா
உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நடவடிக்கையாக சனிப் பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். அவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். குழந்தைகள், முதியவர்கள் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நளன்குளத்தில் நீராட தடை
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சனிபகவான் கோவில் வளாகத்தில் உள்ள நளன் குளத்தில், கொரோனா பரவலை முன்னிட்டு பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நளன்குளத்தில் தற்போது தண்ணீர் இருப்பதால், பக்தர்கள் சிலர் அதில் குளித்து, தங்களது ஆடைகளை குளத்தில் வீசி விட்டுச் செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் குளத்தில் உள்ள தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனத்திற்காக கோவிலின் 4 வீதிகளிலும் பக்தர்கள் வரிசையாக நடந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களின் நலன் கருதி, சவுக்கு கட்டை மற்றும் தகரத்தால் நீண்ட நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story