மனுகொடுக்க வந்த மூதாட்டியை அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்ற மதுரை கலெக்டர்; குறையை தீர்க்க உடனடி நடவடிக்கை
மனு கொடுக்க வந்த மூதாட்டியை அவரது வீட்டுக்கு தனது காரில் அழைத்து சென்று, குறையை தீர்க்க மதுரை கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுத்தார்.
மனுகொடுக்க வந்த மூதாட்டி
மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மூதாட்டி ஒருவர் மனு கொடுக்க வந்திருந்தார். அவர் மனுவை பெட்டியில் போடாமல் கலெக்டரை எதிர்பார்த்து காத்திருந்தார். கலெக்டர் அன்பழகன், அங்கு வந்தவுடன் கலெக்டரை நோக்கி கையெடுத்து கும்பிட்டு என்னை காப்பாற்றுங்கள் என்றார். உடனே கலெக்டர் மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார். பின்னர் அந்த மூதாட்டியை இருக்கையில் அமரவைத்து உங்களுக்கு “என்ன குறை சொல்லுங்கள்” என்று கனிவுடன் கேட்டார்.
உடனே மூதாட்டி தனது பெயர் பாத்திமா சுல்தான்(வயது 77) என்றும், கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவில் வசித்து வருவதாக கூறி கலெக்டரிடம் ஒரு மனுவை கொடுத்தார்.
காரில் அழைத்து சென்றார்
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மதுரை சுயராஜ்யபுரம் பகுதியில் வசிக்கும் வனஜா என்ற பெண்ணின் வீட்டை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 ஆயிரம் கொடுத்து ஒத்திக்கு பிடித்தேன். அந்த வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதால், அந்த வீட்டை காலி செய்து தற்போது கோரிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறேன். ஒத்தி காலம் 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் நான் செலுத்திய ரூ.40 ஆயிரம் பணத்தை கேட்டேன். ஆனால் அந்த பெண், பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை படித்த பின்பு “கலெக்டர், மூதாட்டியிடம் உங்களது குறை தீர்த்து வைக்கப்படும், கவலைப்படாதீர்கள்” என்றார். மேலும் “வீட்டிற்கு எப்படி செல்வீர்கள்?” என்று கேட்டார். உடனே மூதாட்டி, “நான் நடந்து தான் செல்ல வேண்டும்” என்றார். இதனை கேட்ட கலெக்டர் “வாருங்கள் காரில் உங்களை அழைத்து சென்று வீட்டில் விடுகிறேன்” என்றார்.
ஆறுதல் வார்த்தை
இதைகேட்டு மூதாட்டி திகைத்து நின்றார். பின்னர் கலெக்டர், மூதாட்டியை தனது காரில் அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்குள் சென்ற கலெக்டர், சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து மூதாட்டியிடம் ஆறுதலாக பேசினார். மேலும் அந்த மூதாட்டிக்கு பழங்கள் வாங்கி கொடுத்து உங்களது குறை தீர்த்து வைக்கப்படும், கவலைப்படாதீர்கள் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கலெக்டர் வந்த தகவல் அறிந்து அந்த மூதாட்டியின் வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதற்கிடையில் மூதாட்டியின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாருக்கு
கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார், சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று மூதாட்டியின் பணம் 40 ஆயிரத்தை உடனடியாக திருப்பி தரும்படி கூறினார். அந்த பெண்ணும், மூதாட்டியின் பணத்தை ஓரிரு தினங்களில் திருப்பி தந்து விடுவதாக அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார்.
Related Tags :
Next Story