வைகை அணையில் குளித்தபோது பரிதாபம்; மதுரை ஐகோர்ட்டு ஊழியர்-மகள் தண்ணீரில் மூழ்கி பலி
வைகை அணையில் குளித்த மதுரை ஐகோர்ட்டு ஊழியர், அவரது மகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
குளிக்க சென்ற தந்தை-மகள்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜன் (வயது 45). இவர் மதுரை ஐகோர்ட்டில் கணினி துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை தனது 8 வயது மகள் தனுஸ்ரீயை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வைகை அணை பிக்-அப் டேம் பகுதிக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை துவைத்துவிட்டு, இருவரும் குளித்தனர். அய்யப்பராஜனுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார். இதைத்தொடர்ந்து தனுஸ்ரீயும் தண்ணீரில் மூழ்கினாள்.
இந்தநிலையில் காலையில் சென்றவர்கள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்து வைகை அணை பிக்-அப் டேம் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
சாவு
அப்போது அங்கு அய்யப்பராஜன் சென்ற மோட்டார்சைக்கிள் மற்றும் துணிகள் கரையோரம் இருந்தது. இதனால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து அதுகுறித்து வைகை அணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து வலை உதவியுடன் தண்ணீரில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வலையில் இறந்த அய்யப்பராஜனின் உடல் சிக்கி மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனுஸ்ரீ உடலை தேடும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே தகவலறிந்த ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த தனுஸ்ரீ உடலை மீட்டனர். வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தனுஸ்ரீயின் உடல் சிறிது தூரம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தது.
சோகம்
இதுதொடர்பாக வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகள் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிக்கசென்ற இடத்தில் தந்தை, மகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story