வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி; நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டு


கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
x
கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
தினத்தந்தி 14 Dec 2020 10:01 PM GMT (Updated: 14 Dec 2020 10:01 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தீக்குளிக்க முயற்சி
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பொதுமக்கள் பலர் மனு அளிக்க வந்திருந்தனர். நுழைவு வாயில் அருகே ஒரு மூதாட்டி திடீரென மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் அவரிடம் சோதனை செய்தபோது 2 பாட்டில்களில் மண்எண்ணெய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அப்போது திடீரென அங்கிருந்த முதியவர் ஒருவரும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றினார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் முதியவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது அந்த முதியவருக்கு ஆதரவாக அவரது கிராமத்தை சேர்ந்த சிலர் சூழ்ந்துகொண்டதால் போலீசார் பாட்டிலை பறிமுதல் செய்ய போராடினர். முதியவர் தரையில் உருண்டு கதறினார். தொடர்ந்து பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

விசாரணையில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமும், உடன் வந்த அவரது தரப்பை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுடன் வந்தவர்கள் ஒரே கோரிக்கைகளுக்காக வந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது:-

நிலம் ஆக்கிரமிப்பு
எனது பெயர் கேசவன் (வயது 68). எனது மனைவி பெயர் நாகம்மாள் (66). நாங்கள் இருவரும் பொன்னை அருகே உள்ள எஸ்.என்.பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 பேர் ராணுவ வீரர்களாகவும், ஒருவர் வெளிநாட்டிலும் வேலை செய்து வருகின்றனர்.

நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களது நிலம் மற்றும் பாலன் உள்ளிட்ட 5 பேருக்குசொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தை எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதை தட்டிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எங்கள் நிலத்தை அரசு அவர்களுக்கு வழங்கிவிட்டதாக கூறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நடவடிக்கை எடுக்கக்கோரி நான் உள்பட அந்த 4 ஏக்கருக்கு சொந்தமான உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம் என்றார்.

இதையடுத்து போலீசார் அவர்களின் மனுக்களை அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

Next Story