ஆலப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் காரை பொதுமக்கள் முற்றுகை; குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டரின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி வலியுறுத்தினர்.
மத்திய குழு ஆய்வு
காவேரிபாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் 145 குடும்பங்களுக்கு தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய மத்திய குழுவைச் சேர்ந்த அம்பரீஷ், அமித்ரஞ்சன் ஆகியோர் காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு வந்தனர்.
அவர்கள் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று குழாய் இணைப்புகள் மூலம் முறையாக தண்ணீர் வருகிறதா? என ஆய்வு செய்தனர். இதையறிந்த கன்னிகாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து, சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். மனுவைப் பெற்ற கூடுதல் கலெக்டர் 2 வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என உறுதியளித்தார்.
முற்றுகை
ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு சரியாக குடிநீர் வழங்குவது இல்லை, நாங்கள் 5 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறோம் என கூடுதல் கலெக்டர் உமாவிடம் முறையிட முயன்றனர். ஆனால் கூடுதல் கலெக்டர் உமா அனைவரும் மனுக்களாக காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுங்கள் எனத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூடுதல் கலெக்டரின் காரை மறித்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாதவாறு முற்றுகையிட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து கூடுதல் கலெக்டர், மத்திய குழுவினர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், உதவி திட்ட அலுவலர் ஸ்டெல்லா பாய், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குமார், ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story