வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி
x
பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி
தினத்தந்தி 15 Dec 2020 4:46 AM IST (Updated: 15 Dec 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேளாண் சட்டங்கள்
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. நாட்டில் 85 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். 

அவர்களில் 69 சதவீதம் பேர் குறு விவசாயிகள் ஆவர். விவசாயிகள் தான் நட்டின் முதுகெலும்பு. தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

ஆனால் வேளாண் சட்டங்களை திசை திருப்பி அதில் அரசியல் ஆதாயம் தேட பல கட்சிகள் முயற்சித்து வருகிறது. வேளாண் சட்டங்களை ஆழமாக தெரிந்து கொண்ட விவசாயிகள் அதை ஆதரிக்கிறார்கள். விவசாயிகள் தங்களது பயிர்களை கண்டிப்பாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த் கட்சி
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினர் பயன்படுத்திக் கொண்டதாக விவசாயிகள் கூறினர். இப்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எப்போது சொல்ல போகிறார்களோ?

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தோஷம். அவருக்கு வாழ்த்துகள். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் எப்போதும் பின்னணியில் இருக்க மாட்டோம். முன்னணியில் தான் இருப்போம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது தான். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி சரியாக உள்ளது. ஆனால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காதது வருத்தம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story