விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை
விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என மத்திய அரசுக்கு, அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புனே,
காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாய செலவுகள் மற்றும் விலை நிர்ணய ஆணையத்திற்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கவேண்டும் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனது சொந்த கிராமமான மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
நிலைமை தீவிரமடைவதை அறிந்த மத்திய அரசு அன்னா ஹசாரேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது வேளாண்துறை மந்திரியாக இருந்த ராதா மோகன் சிங், அன்னா ஹசாரேவின் கோரிக்கை குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைக்கும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். இருப்பினும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை எனக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
எனவே கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்திய உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகள் கடந்த 8-ந் தேதி முழு அடைப்புக்கு(பாரத் பந்த்) அழைப்பு விடுத்திருந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அன்னா ஹசாரே அன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story