அரசு இலவசமாக இடம் கொடுப்பதாக வதந்தி விக்ரோலியில் நிலம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு


அரசு இலவசமாக இடம் கொடுப்பதாக வதந்தி விக்ரோலியில் நிலம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2020 11:27 PM GMT (Updated: 14 Dec 2020 11:27 PM GMT)

அரசு இலவசமாக இடம் கொடுப்பதாக பரவிய வதந்தியை அடுத்து விக்ரோலி பகுதியில் நிலம் பிடிக்க திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பை விக்ரோலி தாகூர் நகர் பகுதியில் ஜோகேஸ்வரி விக்ரோலி லிங் ரோடு அருகில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரசு ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து கடந்த சில நாட்களாக மும்பை, நவிமும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்கள் மூங்கில் கம்பு, பழைய துணி போன்றவை மூலம் தங்களுக்கு என 300 முதல் 400 சதுர அடி இடத்தை பிடித்து போட்டனர்.

இதையறிந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அரசு இலவசமாக யாருக்கும் நிலம் கொடுக்கவில்லை என அங்கு திரண்டு இருந்த மக்களிடம் கூறினர். ஆனால் பலர் அங்கு இருந்து செல்ல மனமின்றி அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நின்று கொண்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது.

அரசு தவிர இறந்த தந்தையின் நினைவாக பணக்காரர் ஒருவரின் மகள் தனது இடத்தை ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்பதாகவும் வதந்தி பரவி இருக்கிறது. எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் கடந்த 20 நாட்களில் 3 முறை இங்கு திரண்ட மக்களை வெளியேற்றி உள்ளோம். மேலும் அவர்கள் கட்டி வைத்திருந்த கம்பு, துணி போன்றவற்றையும் அகற்றி உள்ளோம். ஆனால் அவர்கள் செல்ல தயாராக இல்லை. இடத்துக்கு அருகில் உள்ள ரோட்டில் திரண்டு உள்ளனர். சிலரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story