பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க சட்டசபையில் ‘சக்தி’ மசோதா தாக்கல் இன்று நிறைவேற்ற மராட்டிய அரசு தீவிரம்
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வகை செய்யும் சக்தி மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவை இன்று நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் நடைபெற வேண்டிய குளிர்கால சட்டசபை கூட்டம் மும்பைக்கு மாற்றப்பட்டது. மேலும் 2 வாரங்களுக்கு மேலாக நடைபெறும் கூட்டம் வெறும் 2 நாட்களாக குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் 2 நாள் சட்டசபை கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது. சபை கூடியதும் மறைந்த முன்னாள் மந்திரிகள் விஷ்ணு சவாரா, விநாயக் ராவ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் நானா பட்டோலே கொண்டு வந்தார். அதன் மீது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உறுப்பினர்கள் பேசினர்.
இதையடுத்து சட்டசபை கூட்டம் வெறும் 2 நாட்களுக்கு மட்டும் நடத்துவதால் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச முடியாமல் போய் விடும் என்று உறுப்பினர்கள் பலர் தெரிவித்தனர்.
இதனை ஒப்புக்கொண்ட சபாநாயகர், அடுத்து நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர், உரிய வழிகாட்டுதலுடன் கூடுதல் நாட்கள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் குறுகிய நாட்கள் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சட்டசபையில் 6 அவசர சட்டம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ‘சக்தி’ மசோதா உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சக்தி மசோதாவை தாக்கல் செய்த மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விவரித்தார்.
அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கற்பழிப்பு, திராவகம் வீச்சு, சமூக வலைத்தளத்தில் ஆபாசம் போன்ற குற்ற செயல்களுக்காக தூக்கு தண்டனை வரையும், ரூ.10 லட்சம் அபராதம் வரையும் விதிக்க சக்தி மசோதா வழிவகை செய்கிறது.
போலீசார் தங்களது விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். கோர்ட்டில் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். சிறப்பு போலீஸ் படையும் உருவாக்கப்படும். பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட உதவி, நிதியுதவி, மறுவாழ்வு போன்ற அம்சங்களும் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திஷா சட்டத்தை பின்பற்றி, மராட்டியத்தில் சக்தி சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 10 மாத ஆழ்ந்த ஆய்வை தொடர்ந்து மசோதா தயாரிக்கப்பட்டு இருப்பதாக மந்திரி அனில் தேஷ்முக் கூறினார்.
இன்றுடன் நிறைவு பெறும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற ஆளும் தரப்பு தீவிரம் காட்டி உள்ளது.
Related Tags :
Next Story