சூலூரில் 6 மாதங்களுக்கு முன் சொகுசு காரை திருடிய வாலிபர் கைது வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர்
சூலூரில் 6 மாதங்களுக்கு முன் சொகுசு காரை திருடிய வாலிபரை வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
சூலூர்,
சூலூரை அடுத்த காங்கயம்பாளையம் சோதனை சாவடியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசாரை முந்தி செல்ல முயன்றது. உடனே போலீசார் லாவகமாக செயல்பட்டு சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி, அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த காரில் வந்த நபரிடம், ஏன் காரை நிறுத்தாமல் செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, பிரேக் சரிவர பிடிக்கவில்லை என அவர் பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
விசாரணை
விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால், போலீசார் அவரை சூலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஜார்ஜ் குமார் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்த கார், கடந்த 6 மாதத்துக்கு முன்பு சூலூர் பகுதியில் திருட்டு போனது என்பதும் தெரியவந்தது. மேலும் கோவை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் ஜார்ஜ் குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
வாலிபர் கைது
இதைத் தொடர்ந்து போலீசார், ஜார்ஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதில் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story