வத்தலக்குண்டுவில் நகைக்கடை அதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
வத்தலக்குண்டுவில் நகைக் கடை அதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக ரியல் எஸ்டேட் புரோக்கரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். அதேபோல் வத்தலக்குண்டு அருகேயுள்ள மல்லனம்பட்டியை சேர்ந்தவர் விஜயராஜன் (38). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் பணம் கொடுக்கல்வாங்கல் தொழில் செய்கிறார். இந்த நிலையில் சதீஷ் நடத்தும் நகைக்கடைக்கு, விஜயராஜன் அடிக்கடி நகைகளை வாங்க செல்வார்.
அவ்வாறு செல்லும் போது குறிப்பிடத்தக்க தொகைக்கு நகைகளை வாங்குவாராம். இதனால் அவர் மீது நகைக்கடை அதிபர் சதீசுக்கு மரியாதை ஏற்பட்டது. இதனால் நகைகளை கடனுக்கு வாங்கும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயராஜன் 280 பவுன் அளவுக்கு சிறிது, சிறிதாக நகைகளை கடனுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
மோசடி செய்தவர் கைது
அதன்பின்னர் அந்த பணத்தை உடனடியாக கொடுக் காமல் அவர், காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் ரூ.75 லட்சத்தை திரும்ப தரும்படி சதீஷ் நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி ரூ.75 லட்சத்துக்கு 2 காசோலைகளை விஜயராஜன் வழங்கினார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, கையெழுத்தில் வேறுபாடு இருப்பதாக கூறி திரும்ப வந்தது.
அப்போது விஜயராஜன் தனது கையெழுத்தை மாற்றி போட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த நகைக்கடை அதிபர் சதீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சத்யா, சப்இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் 280 பவுன் நகைகளை வாங்கி விட்டு பணம் கொடுக் காமல் மோசடி செய்ததாக விஜயராஜனை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story