குழித்துறை நகராட்சியில் குமரி மாவட்ட கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு; உரம் தயாரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது அவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்று கூறினார்.
‘திடீர்’ ஆய்வு
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று காலை குழித்துறை நகராட்சி அலுவலகத்திற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி மற்றும் அதிகாரிகளிடம் நகராட்சி பகுதியில் உள்ள செயல்பாடுகள், தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையில் நடைபெறும் குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள், ஞாறான்விளையில் உள்ள நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கீழ்பம்மத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு, மார்த்தாண்டம் சந்தை பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு நிலையம் போன்றவற்றை பார்வையிட்டார்.
கலெக்டரிடம் கோரிக்கை
இதற்கிடையே மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க துணை தலைவர் செல்வராஜ், கலெக்டரை சந்தித்து, மார்த்தாண்டம் சந்தை பகுதியில் செயல்படும் உரம் தயாரிப்பு நிலையத்தால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அந்த உர நிலையத்தை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும், குழித்துறை நகர தே.மு.தி.க. செயலாளர் ஜான் பிரிட்டோ, நகராட்சி பகுதியில் ஒப்பந்த பணிகள், வரிவிதிப்பு போன்றவை தொடர்பாக கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
பேட்டி
ஆய்வு பணிகளை முடித்த பிறகு கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குழித்துறை நகராட்சி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை தற்போது மார்த்தாண்டம் பகுதியில் சேகரித்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி உரம் தயாரிக்கப்படுகிறது. அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. 6 அல்லது 7 மாதங்களில் வேறு இடத்திற்கு மாற்றப்படும். நகராட்சி பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை, குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story