புதுவை ஜான்குமார் எம்.எல்.ஏ. வீட்டில் திடீரென காங்கிரஸ் கொடி அகற்றம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு


புதுவை ஜான்குமார் எம்.எல்.ஏ; ஜான்குமார் எம்.எல்.ஏ. வீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடி அகற்றப்பட்டுள்ளது
x
புதுவை ஜான்குமார் எம்.எல்.ஏ; ஜான்குமார் எம்.எல்.ஏ. வீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொடி அகற்றப்பட்டுள்ளது
தினத்தந்தி 16 Dec 2020 1:45 AM IST (Updated: 16 Dec 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ.வின் வீட்டில் பறந்த காங்கிரஸ் கொடி திடீரென அகற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வுடன் இணைப்பு?
புதுவை காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜான்குமார். நெல்லித்தோப்பில் உள்ள இவரது வீட்டின் மாடியில் பிரமாண்டமான காங்கிரஸ் கொடி எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.

புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மேலிடப் பார்வையாளரான நிர்மல்குமார் சுரானாவை ஜான்குமார் எம்.எல்.ஏ. சந்தித்துப் பேசினார். பா.ஜ.க.வில் அவர் இணைவதற்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பு என்ற தகவல் பரவியதோடு மட்டுமின்றி தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கட்சியில் இருந்து விலகவும் தயங்க மாட்டேன் என்று அவர் கருத்து தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை குறித்து கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

கட்சியுடன் அதிருப்தி
இந்தநிலையில் ஜான்குமார் எம்.எல்.ஏ.வின் வீட்டின் மாடியில் பறந்த காங்கிரஸ் கட்சியின் கொடி கடந்த சில நாட்களாக காணவில்லை. கொடிக்கம்பத்தில் இருந்து அதை இறக்கி கழற்றி வைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் பறந்த காங்கிரஸ் கொடியை கழற்றிவைத்தார். அதன்பின் அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி சமரசம் செய்து மீண்டும் அவரது வீட்டில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிலையில் கட்சி தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வரும் ஜான்குமார் தனது வீட்டில் பறந்த காங்கிரஸ் கொடியை திடீரென அகற்றி இருப்பது புதுவை அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story