சென்னை சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் விடிய விடிய சோதனை ரூ.1.37 கோடி, 4 கிலோ தங்கம், வைரம் சிக்கியது - ரூ.7 கோடி சொத்து ஆவணங்களும் பறிமுதல்
சென்னை சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 37 லட்சம், 3.81 கிலோ தங்கம், 3.343 கிலோ வெள்ளி, 10.52 கேரட் வைரம், நிரந்தர வைப்பு நிதி கணக்கில் ரூ.37 லட்சம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் செயல்படும் சுற்றுச்சூழல் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு லாவண்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
சுற்றுச்சூழல் சூப்பிரண்டு பாண்டியன் அலுவலக அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.88 ஆயிரத்து 500 மற்றும் அவரது வங்கி கணக்கில் ரூ.38 லட்சத்து 66 ஆயிரத்து 220 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை சாலிகிராமம், திலகர் தெருவில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.வீட்டின் கதவுகள் அனைத்தையும் சாத்திவிட்டு விடிய, விடிய சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 37 லட்சம், 3.81 கிலோ தங்கம், 3.343 கிலோ வெள்ளி, 10.52 கேரட் வைரம், நிரந்தர வைப்பு நிதி கணக்கில் ரூ.37 லட்சம் மற்றும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story