மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து “ரஜினியுடன் இணைய தயார்” - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
“மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்“ என்று கமல்ஹாசன் கூறினார்.
கோவில்பட்டி,
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ந் தேதி மதுரையில் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோவில்பட்டியில் உள்ள மண்டபத்தில் தொழில் முனைவோர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:-
நாம் செயலில் இறங்க வேண்டிய நேரம் இது. அலிபாபா 40 திருடர்கள் போல் 234 பேர் மக்களுக்கு சேவை செய்பவர்களை செய்யவிடமால் தடுக்கின்றனர். மக்கள் சரியாக திட்டமிட்டு சரியான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் சரியான முடிவு எடுத்தால் தமிழகத்தில் புதிய மாற்றதை ஏற்படுத்தலாம்.
எங்கள் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் போது, மக்கள் கோரிக்கை குறித்து மக்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வர்கள். அதில் நான் சாட்சி கையெழுத்து போடுவேன். மக்கள் கோரிக்கையை எங்கள் சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை என்றால், தனது பதவியை ராஜினாமா செய்வார்.
நான் ஒரு ‘ஏ‘ அணியை உருவாக்கி கொண்டு இருக்கிறேன். நாங்கள் டேபிளுக்கு கீழ் கவர் வாங்க மாட்டோம். மக்களை தேடி செல்வோம். ஊழல் என்ற உயிர் நாடியை அடிப்போம். மேலே அடித்தால் கீழே சரியாகும். மக்களின் பேச்சை கேட்டு தான் எங்கள் ஆட்சி நடக்கும்.
எங்கள் ஆட்சியில் விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம பங்கு உண்டு. கட்சி ஆரம்பித்து வேடிக்கை பார்க்க வரவில்லை. நீங்கள் அனுமதி தந்தால் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம். ஊழல் இல்லாத ஆட்சியை நான் நடத்தி காட்டுவேன். ஓட்டுக்கு பணம் வாங்குவது உங்களை ஏமாற்றுவது போன்றது. உங்கள் பணத்தை தான் அவர்கள் ஓட்டுக்கு தருகிறார்கள். அதனால் பணம் கொடுக்க வருபவர்களிடம் ரூ.5 லட்சம் கேளுங்கள். மக்கள் நீதி மய்யம் நல்ல அமைப்பு. இளைஞர்கள் இணைந்து வாருங்கள். நாளை நமதாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். எப்போதும் மக்கள் திலகம் தான். அவர் தி.மு.க.வில் இருந்த போதும் சரி, அ.தி.மு.க.வை தொடங்கிய போதும் சரி, மக்கள் திலகமாகதான் இருந்தார். எம்.ஜி.ஆர். ஏழரை கோடி மக்களுக்கு சொந்தம். அதில் நானும் ஒருவன். எனது கட்சி சின்னத்திற்கு எதிராக யார் தூண்டிவிடுகிறார்கள்?, யார் செயல்படுகிறார்கள்? என்பதை பொறுத்து எனது விஸ்வரூபம் இருக்கும்.
என்னுடைய தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு முதலில் அனுமதி கொடுத்தது ஏன்?, பின்னர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? இதுவே என்னுடைய கேள்வி. ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
எனது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவரது கொள்கை குறித்து இனி தான் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக, மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும், ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கமல்ஹாசனுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஜி.கதிரவன் நினைவு பரிசு வழங்கினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பொது செயலாளர்கள் எம்.முருகானந்தம், சந்தோஷ் பாபு, மாநில பொது செயலாளர் முரளி அப்பாஸ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தி ஊடகப்பிரிவு செயலாளர் பொன் மகாராஜன், விவசாய அணி செயலாளர் மயில்சாமி, மகளிர் அணி செயலாளர் மூகாம்பிகை ரத்தினம், இளைஞர் அணி சினேகன், தொழில் அதிபர்கள் ராஜூ, பரமசிவம், ராஜவேல், தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கமல்ஹாசன் மாலை 5.45 மணிக்கு எட்டயபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திறந்த வேனில் நின்றபடி கையசைத்துக் கொண்டே மக்களிடம் பேசினார். பின்னர், பாரதியார் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்குள்ள பார்வையாளர் வருகை பதிவேட்டில் ‘அய்யன் என் கவிதை அப்பன் பிறந்த வீடு.. அய்யா பாரதி என் அறிவு பிறந்த வீடு‘ அன்பன் கமல்ஹாசன் என எழுதிச் சென்றார்.
தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரத்துக்கு சென்ற கமல்ஹாசன் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி மீனவர்களை சந்தித்து பேசினார். மில்லர்புரத்தில் சலூன் கடையில் நூலகம் வைத்து உள்ள பொன்மாரியப்பனை சந்தித்து பேசி, அங்கு இருந்த புத்தகங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் கூறியதாவது, ‘ஸ்டெர்லைட் பிரச்சினையில் முழுமையான நீதியை நோக்கி நகர்த்துவது எங்கள் கடமை. கட்சியில் மீனவர் அணி தொடங்க உள்ளோம். தகுதியானவர்கள் அதில் இருக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் லாக்-அப் சாவுகள் ஏற்படாத வகையில் போலீஸ் துறையையே சீரமைப்பது எங்கள் கடமை. தமிழகத்தில் 234 பேரை காலி செய்ய வேண்டும். அதனை செய்ய ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இதுதான் அந்த கூட்டம்‘ என்றார்.
Related Tags :
Next Story