காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேச்சு
காசநோய் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா தமிழகம் 2025 இயக்கத்தின் சார்பில் காசநோய் (டி.பி.) கண்டறிய நடமாடும் எக்ஸ்ரே வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- காசநோய் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) மாதவநாயர் காலணி, நாளை (வியாழக்கிழமை) கீழஈரால் ஊராட்சி தோணுகால், நாளை மறுநாள் புளியங்குளம், 19.12.2020 நாகலாபுரம் ஊராட்சி தாப்பாத்தி, 21.12.2020 கடம்பூர் பேரூராட்சி நடராஜபுரம், ஜோதிநகர், 22.12.2020 பேரிலவான்பட்டி ஊராட்சி சுந்தரலிங்கம் காலணி, 23.12.2020 ஏரல் பேரூராட்சி திருப்புளியங்குடி, 24.12.2020 மெஞ்ஞானபுரம் ஊராட்சி தேரியூர் ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தரமான முறையில் காசநோய் கண்டுபிடிக்கப்பட்டு இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் மத்திய அரசின் ’டிபி இல்லாத 2025‘என்ற இலக்கை அடையும் வகையில் தமிழக அரசால் அதிநவீன நடமாடும் எக்ஸ்ரே வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, காசநோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் மற்றும் அதிக பாதிப்புள்ளாக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து சுகாதார குழுவினர் வீடுகளுக்கு நேரடியாக சென்று காசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கின்றனர். இந்த முகாம்களில் எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் முருகவேல், மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (காசநோய்) க.சுந்தரலிங்கம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) பொன் இசக்கி, துணை இயக்குநர் (தொழுநோய்) யமுனா, மாநகர நல அலுவலர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story