சட்டசபை கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ‘சக்தி’ மசோதா - எதிர்க்கட்சியின் கோரிக்கை ஏற்பு


சட்டசபை கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ‘சக்தி’ மசோதா - எதிர்க்கட்சியின் கோரிக்கை ஏற்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 5:55 AM IST (Updated: 16 Dec 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சக்தி மசோதாவை சட்டசபை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை 2 நாட்கள் மட்டும் மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் சக்தி மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கற்பழிப்பு, திராவகம் வீச்சு, சமூக வலைத்தளத்தில் ஆபாசம் போன்ற குற்ற செயல்களுக்காக தூக்கு தண்டனை வரையும், ரூ.10 லட்சம் அபராதம் வரையும் விதிக்க வழிவகை செய்கிறது.

போலீசார் தங்களது விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். கோர்ட்டில் 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் போன்ற அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திஷா சட்டத்தை பின்பற்றி, மராட்டியத்தில் சக்தி மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையின் இறுதி நாளான நேற்று இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் தரப்பு தீவிரம் காட்டியது. ஆனால் சட்டசபை கூட்டு குழுவின் ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும், இது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பா.ஜனதா கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்றுக்கொண்டது.

இதை அடுத்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபை கூட்டு குழு ஆய்வுக்கு சக்தி மசோதாவை அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்த சபாநாயகர், பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்.

Next Story