மானூர் அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக்கொலை - அண்ணன்-தம்பி கைது


மானூர் அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக்கொலை - அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 16 Dec 2020 4:15 AM IST (Updated: 16 Dec 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அயூப் கான் புரத்தை சேர்ந்தவர் தவிடன் (வயது 61). விவசாயி. இவர் தனது வீட்டை ஒட்டியபடி சிறிய கடையும் வைத்து நடத்தி வந்தார்.

அதே ஊரை சேர்ந்த விவசாயி சுப்பையா. இவர் தனது வயலில் உள்ள நெற்பயிரை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மாடுகள் மேய்ந்ததாக தவிடனிடம் கூறி உள்ளார். அதற்கு அவர், எனது வீட்டு தோட்டத்தில் உள்ள வாழைகளையும் கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறி இருக்கிறார்.

இதை அறிந்து அங்கு வந்த ஐ.டி.ஐ.படித்து வரும் கிருஷ்ணனின் 17 வயது மகன், எங்களை குறை கூறுபவருடன் சேர்ந்து நீங்களும் எப்படி பேசலாம் என்று கூறி தவிடனை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே தவிடனின் தம்பி ராமகிருஷ்ணன், அவரது மனைவி அனிதா ஆகியோர் சண்டையை விலக்கி விட்டனர்.

இதையடுத்து அங்கிருந்து வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுவன் பி.இ. படிக்கும் தனது அண்ணன் வெங்கடேஷ் பெருமாளை (21) அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு வந்தார். அவர்கள் இருவரும் கடையில் இருந்த தவிடனை வெளியை இழுத்து வந்து அடித்து உதைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தவிடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கரிகால் பாரிசங்கர், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தவிடனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தவிடனின் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ் பெருமாள் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story