தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழுவில் தலைவர்- கவுன்சிலர்களிடையே ஒத்துழைப்பு இல்லை தி.மு.க.வினர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு
தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழுவில் தலைவர்- கவுன்சிலர்களிடையே ஒத்துழைப்பு இல்லை என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று பனகல் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி (தி.மு.க.) தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சிக்குழு செயலாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது வருமாறு:-
முரளி (தி.மு.க.):- நெடுஞ்சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு இல்லை
விஜிகதிரவன் (தி.மு..க):- தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழுவில் தலைவர், அதிகாரிகள், கவுன்சிலர்களிடையே உரிய ஒத்துழைப்பு இல்லை. பதவி ஏற்று 1 ஆண்டுகள் ஆகி விட்டது. கூட்டத்திற்கு வருகிறோம், செல்கிறோம். இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. இந்த 4 ஆண்டுகளும் இதே நிலை தான் நீடிக்குமா?
தாமரைச்செல்வன் (தி.மு.க.):- மாவட்ட ஊராட்சிக்குழுவில் தி.மு.க. கவுன்சிலர்கள் அதிகம் உள்ளனர். மக்களுக்கு எங்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தல் இன்னும் சில மாதத்தில் வர உள்ளது. அதற்குள் பணிகளை செய்தால் தான் மக்கள் எங்களை ஏற்பார்கள். மாவட்டக்குழுவில் கவுன்சிலர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நிதி ஒதுக்கீடு
உதயன் (தி.மு.க.):- மாவட்ட ஊராட்சிக்குழுவில் என்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். மேலும் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ராஜா (தி.மு.க.):- மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் கூட்டம் மட்டும் நடத்தப்படுகிறது. சரியான ஒத்துழைப்பு இல்லை. எவ்வளவு நிதி வந்து உள்ளது. எனவே வார்டுகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க முடியுமோ? அதனை ஒதுக்கி கவுன்சிலர்கள் நல்ல பெயர் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
வெளிப்படையான திட்டங்கள்
விஜயலட்சுமி (அ.தி.மு.க.):- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெளிப்படையாக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. 2 ஆயிரம் மினி கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களிடையே நல்லபெயரை எடுத்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகள் கணக்கெடுப்பில் கிராம மக்களுக்கு என்ன மாறுதல் தேவையோ அதனை செய்து கொடுக்க வேண்டும்.
தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி:- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் யார், மேல் உள்ளவர்கள் யார்? என தெரியவில்லை. அதனை அதிகாரிகள் தெளிவாக எடுத்துக்கூறி, புதிதாக சேர்க்க வாய்ப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி வகுப்புக்கு செல்லாத கவுன்சிலர்கள் செல்ல வேண்டும்.
28 கொள்முதல் நிலையம்
துணைத்தலைவர் முத்துச்செல்வன்:- மேலும் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது குறித்த அறிவிப்பு பலகையை அனைத்து ரேஷன்கடைகளிலும் வைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் எவ்வளவு கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது?.
நுகர்பொருள் வாணிப கழக உதவி மேலாளர் பாலசுப்பிரமணியன்:- தற்போது 28 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருஞானசம்பந்தம் (தி.மு.க.):- மக்கள் குறைகளை கேட்டறிய, மாவட்ட கவுன்சிலர்களுக்கு அந்தந்த வார்டு பகுதியில் அறை ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
பரபரப்பு
தஞ்சை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ள நிலையில், அவர்கள் ஒத்துழைப்பு இல்லை என கூட்ட அரங்கில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story