சினகுடி அருகே இறந்து கிடந்த புலிக்கு விஷம் வைத்து கொன்றது அம்பலம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டுபடிப்பு
மசினகுடி அருகே இறந்து கிடந்த புலிக்கு விஷம் வைத்து கொன்றது பிரேத பரிசோதனை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே சிங்கார வனத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி பெண்புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் புலி இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் 2 புலிக்குட்டிகள் சத்தம்போட்டவாறு கிடந்தது.
இதைத்தொடர்ந்து 2 ஆண்புலி குட்டிகளையும் வனத்துறையினர் மீட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முக்கிய உடற்பாகங்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெண் புலி எப்படி இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புலியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை ஆய்வகத்தில் இருந்து வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் விஷம் வைத்து பெண்புலி கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து புலிக்கு விஷம் வைத்த நபர்கள் குறித்த சிங்கார வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பெண் புலிக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. எனவே இந்த துணிகர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை பிடித்த பிறகே எதற்காக விஷம் வைத்து புலி கொல்லப்பட்டது என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என்றனர்.
Related Tags :
Next Story