கொரோனா பரவுவதை தடுக்க சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள்
கொரோனா பரவுவதை தடுக்க சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊட்டி,
குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார். அப்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் ஏற்கனவே திறக்கப்பட்டன. பின்னர் அனைத்து சுற்றுலா மையங்களும் கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவுவதை தடுக்க முககவசம் அணிவது குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்டாயமாக முககவசம் அணிய வைக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ள சுற்றுலா மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சுற்றுலா பயணிகள் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோன்று பஸ்களில் பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அணிய தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரவுவதை தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story