புற்கள் அறுக்க சென்றபோது காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி - மகன்- சகோதரி உயிர் தப்பினர்
சீகூர் வனத்தில் புற்கள் அறுக்க சென்ற மூதாட்டியை காட்டு யானை தாக்கி கொன்றது. இதில் மகன், சகோதரி ஆகியோர் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல பகுதியான சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆனைக்கட்டி ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சரசு (வயது 65). இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் தனது மூத்த மகன் பாலன் (42), சகோதரி மாதி (55) ஆகியோருடன் சரசு, தான் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு புற்கள் அறுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றார். பின்னர் அங்கு புற்களை அவர்கள் அறுத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு குட்டியுடன் ஒரு காட்டு யானை திடீரென்று வந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை அந்த யானை பார்த்ததும் துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அப்போது சரசு காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அப்போது அந்த காட்டு யானை சரசுவை காலால் மிதித்து தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். பாலன், மாதி ஆகியோர் தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தனர். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினரை அழைத்துக்கொண்டு சரசுவை தேடி வந்தனர். அப்போது அங்கு சரசு பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவலறிந்த சீகூர் வனத்துறையினர் மற்றும் தேனாடு கம்பை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் ஆதிவாசி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த சரசுவின் குடும்பத்தினரிடம் வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது. பந்தலூர் பகுதியில் கடந்த 10, 13-ந் தேதிகளில் தொடர்ச்சியாக 3 பேரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி மூதாட்டியை காட்டு யானை கொன்ற சம்பவம் பொது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூரை சேர்ந்தவர் முகமது (63). இவர் அங்குள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை 7 மணிக்கு எஸ்டேட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு திடீரென்று வந்த காட்டு யானை முகமதுவை துரத்தியது.
இதனால் அவர் தப்பி ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story