வாணியம்பாடி அருகே, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - லாரி சிறைபிடிப்பு


வாணியம்பாடி அருகே, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 4:00 PM IST (Updated: 16 Dec 2020 3:52 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுதெரு பகுதியில் பெரியார் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக 3 ஆழ்துளை கிணறு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 5 நாட்கள் முன்பு 2 ஆழ்துளை கிணறுகளை பூங்காவில் அமைந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் 3-வதாக மற்றொரு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக லாரியை கொண்டு வந்து பணி மேற்கொள்ள தொடங்கினர்.

இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு ஒரே பகுதியில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் தங்கள் பகுதியில் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக பணியை நிறுத்த வேண்டும் எனக்கூறி லாரியை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நிறுத்திவிட்டு போர்வெல் லாரி திரும்பி செல்லும் வரை போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியின்றி போலீசார் போர்வெல் லாரியை திரும்பி அனுப்பினர். இதனையடுத்து 1½ மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story