கடந்த 11 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.4 கோடி அபராதம் - கண்காணிப்பு கேமரா எடுத்த படம் மூலம் நடவடிக்கை
கோவையில் கடந்த 11 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமரா எடுத்த படத்தின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் பலர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிடுகிறார்கள். இதனால் சாலை விபத்துகள் அதிகளவு நடந்து வருகின்றன.
இதை போக்கும் விதமாக கோவை மாநகர போலீசார் சார்பில் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உள்பட பல்வேறு சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ‘சீட் பெல்ட்‘ அணியாமல் கார் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகன நம்பர் பிளேட்டுகளை தானாகவே படம் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சிக்னல்களில் கோடுகளை தாண்டும் வாகனங்களையும் கேமரா படம் பிடித்து அனுப்பும்.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் அபராத தொகைக்கான ரசீது அனுப்பும் வகையில் தொழில் நுட்பத்துடன் (சர்வர்) அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பு கேமரா எடுத்த படத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 11 மாதங்களில் ரூ.4 கோடி வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க முக்கிய சிக்னல்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளன. சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறி யார் சென்றாலும் அந்த வாகனத்தின் பதிவு எண்களை கண்காணிப்பு கேமராக்கள் தானாக படம் பிடித்துவிடும். பின்னர் விதிமீறலில் ஈடுபட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் ஆர்.சி. புத்தகத்தில் பதிவு செய்யப்படும்.
பின்னர் அது சம்மந்தப்பட்டவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். வாகனம் புதுப்பிப்பு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு விதிமீறிய வாகனங்கள் செல்லும்போது சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே அதற்கான பணிகளை செய்ய முடியும். அதன்படி கடந்த 11 மாதங்களில் மட்டும் ரூ.4 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story