வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கிருஷ்ணகிரியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் - 131 பேர் கைது
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கிருஷ்ணகிரியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் பழனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், மண் வெட்டி மற்றும் நெல் பயிரை கையில் ஏந்தி சிலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மின் மசோதா, 2020-ஐ சட்டமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு 2 இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 131 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story