மாவட்டத்தில், 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்


மாவட்டத்தில், 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2020 2:44 PM GMT (Updated: 16 Dec 2020 2:44 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்று மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 86 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும் இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மாடுகளுக்கு தேவையான பசும்புற்கள் தேவையான அளவில் கிடைக்கும். இருப்பினும் மேய்ச்சல் மட்டுமே போதுமானதாக இருக்காது. எனவே தரமான அடர் தீவனமும் பால் உற்பத்திக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். இதனால் மாடுகளின் பால் உற்பத்தி திறன் முழுமையாக வெளிப்படும். மாடுகளுக்கு பெரியம்மை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க மூலிகை மருத்துவ முறைகளை பின்பற்றலாம். குளிர்ந்த காற்று மற்றும் பனி காணப்படுவதால் கோழி கொட்டகைகளை சுற்றிலும் வெளிப்புறத்தில் தார்பாயின் உதவியுடன் நன்கு கட்ட வேண்டும். மேலும் கொட்டகைகளில் தகுந்த வெப்பநிலையை ஏற்படுத்துவதற்காக அதிக வெப்பத்தைக் கொடுக்கும் மின்விளக்குகளை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story