மாவட்டத்தில் டாக்டர் உள்பட 25 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு
மாவட்டத்தில் டாக்டர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 10,814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் கொண்டமநாயக்கனூரை சேர்ந்த டாக்டர், மோகனூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,839 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 15 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் அண்ணாநகரை சேர்ந்த 90 வயது முதியவருக்கு கடந்த 13-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,564 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ள நிலையில் 169 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story