வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றனர் - சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி


வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றனர் - சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2020 8:27 PM IST (Updated: 16 Dec 2020 8:27 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றனர் என்று சேலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

சேலம்,

பா.ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இதில் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மற்றும் கூட்டமைப்பு குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. இல.கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இதற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. விவசாயிகள் எப்போதும் தேசத்தின் பக்கம் தான் இருக்கிறார்கள். கடந்த 2 மாதங்களாக தி.மு.க. விவசாயிகளை ஏமாற்றுவதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டார்கள். அத்தனையும் அவர்களுக்கு தோல்வியை தழுவியது. கிசான் திட்டத்தின் மூலம் போலியாக பணம் பெற்றவர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்படுத்தப்பட்ட கூட்டணியே தொடரும் என்று கடந்த மாதம் சென்னைக்கு வந்த உள்துறை மந்திரி அறிவித்துள்ளார். எத்தனை சீட் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள்.

எங்களுடைய கட்சி ஒரு உயிரோட்டமான கட்சி. ஆகையால் ஏ டீம், பி டீம் என்று எதுவும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து முறையாக தேசிய தலைமை அறிவிக்கும்.

வேளாண் திருத்த சட்டங்களை கமல்ஹாசன் படித்து பார்த்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பொதுச் செயலாளர் ரவி நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு 100 சதவீதம் நன்மையை தரும். எதிர்க்கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்களை நிறைவேற்றிய பின்னர் தான் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதை போல தமிழகத்திலும் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு அனைத்து தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறோம், என்றார்.

Next Story