தேனி அருகே, தனியார் தங்கும் விடுதியில் பேக்கரிகடை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை - தொழில் ந‌‌ஷ்டத்தால் விபரீதம்


தேனி அருகே, தனியார் தங்கும் விடுதியில் பேக்கரிகடை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை - தொழில் ந‌‌ஷ்டத்தால் விபரீதம்
x
தினத்தந்தி 16 Dec 2020 9:09 PM IST (Updated: 16 Dec 2020 9:09 PM IST)
t-max-icont-min-icon

தொழிலில் ஏற்பட்ட ந‌‌ஷ்டத்தால் தேனி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் பேக்கரிகடை உரிமையாளர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 47). இவருடைய மனைவி சுஜாதா (44). இவர்களுக்கு குழந்தை இல்லை. குபேந்திரன் சென்னை திருமங்கலத்தில் பேக்கரிகடை நடத்தி வந்தார். இதனால், கணவன், மனைவி இருவரும் சில ஆண்டுகளாக சென்னை திருமங்கலத்தில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் பேக்கரி தொழிலில் அவர்களுக்கு ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு கடன் சுமை அதிகரித்தது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் தவித்தனர். இவர்களுக்கு சொந்தமான நிலம் தேனி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்று கடனை அடைக்க அவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக குபேந்திரன் தனது மனைவியுடன் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தேனிக்கு வந்தார். தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். அந்த அறையில் தங்கியபடி 2 மாதமாக பூர்வீக சொத்தான நிலத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் அவர்களால் நிலத்தை விற்பனை செய்ய இயலவில்லை. தொழில் ந‌‌ஷ்டம், கடன் என மனம் வருந்திய நிலையில், நிலத்தையும் விற்பனை முடியாத விரக்தியில் அவர்கள் தவித்தனர். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு சுஜாதா, விடுதி அறையில் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதுபோல், அதே அறையில் குபேந்திரனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவில் அவர்கள் சாப்பிட வெளியே செல்லாததால் விடுதி பணியாளர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் குபேந்திரன் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே தங்கும் விடுதி நிர்வாகத்தினர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வேறு சாவி மூலம் போலீசார் அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரின் பிணங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குபேந்திரனின் தம்பி பரசுராமன் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story